Saturday, May 22, 2010

நீ அறிவாயா?

நான் தெரிந்தே
தொலைந்து போவதும் கூட
சாத்தியம் தானடி!
உன் கலைந்த கூந்தலில் மட்டும்...

Tuesday, May 4, 2010

புரியாத விளையாட்டு

என் ஒவ்வொரு விடியலும்
எதிர் வீட்டு வாசலில்,
நீ உதயமாவதிலிருந்து தான்
ஆரம்பமாகிறது.
முடிந்து போன கோலத்தை
மும்முரமாய் திருத்திக்கொண்டிருப்பாய் நீ:
வராத நாளிதளுக்காய்,
வந்து போய்க்கொண்டிருப்பேன் நான்!

குளித்து முடித்ததும்
கூந்தல் உலர்துவதற்காய்,
உன் வீட்டு மாடியில் நீ
காற்றில் கலந்து வரும் உன்
கூந்தல் நீர்த்திவளைகளுக்காய்,
காத்துக்கிடக்கிறேன் நான்!
நீ உலர்த்தி விடுகிறாய்;
நான் நனைந்து விடுகிறேன்!!

பக்கத்துவீட்டுப் பிள்ளைகளுடன்
கொஞ்சி விளையாடி குழந்தையாகிறாய்.
நான் பார்ப்பது தெரிந்தால் மட்டும்
அவசரமாய் குமரியாகிறாய்!

சொல்லாத காதலின் சுவை,
புரியாத கவிதையின்
புரிதலுக்கான தேடலைப் போன்றது!

கடந்து போன ஆண்டுகளுக்கும்,
பிரிந்து மறைந்த காதலருக்கும் சேர்த்து தான்
காதலிக்கப் போகிறோம்!
உலகத்து மரங்களெல்லாம்
ஒருசேர பூப்பொழியும்,
உனக்கான நாளொன்றில்
நானே நம் காதல் சொல்வேன்!!
அதுவரையில் விளையாடிக்கொள்வோம்
உன்னை தெரியாதவனாக நானும்,
என்னைப் புரியாதவளாக நீயும்...

அழகு!

நம் தெருவை கடந்து போகும்
ஒவ்வொருவருக்கும் தெரியும்,
உன் வீட்டு கோலம் தான் அழகு என்று.
அதை விட அழகு,
கோலத்தை சுற்றி உள்ள
உன் பாதச்சுவடுகள்..!

Sunday, May 2, 2010

வேண்டுகோள்

நான் அழைத்ததும்
உடனே திரும்பி விடாதே!
உன் பெயரை உச்சரிக்க
இன்னொரு வாய்ப்பு வேண்டும் எனக்கு..!

சாரல்

உன் வீடு தேடி வரும் மழை.
மழையில் நனைய மனமில்லாதவளாய்
வீட்டிற்குள் நீ!
இருந்தும் உன்னை தொட்டு விடும் ஆசையில்
திருட்டுத்தனமாய்
ஜன்னலில் நுழைகிறது
சாரல்...!

நன்றி

சில்லிட்டு போகிறது பூமி
உன் பாதம் பட்டவுடன்.
அகமகிழ்ந்து நன்றி கூறியது,
அறுந்துவிட்ட
உன் செருப்புக்கு...!